Category: சில க(வி)தைகள்!



“சோறு தின்று சோறு தின்று, களிமண் சேறாய் போன தமிழன் நான்,
ஏறு பூட்டி உழுதாலும், சொரணை ஏறாத வீரன் நான்!

இங்கே இடமில்லையென்று இனத்தை
எத்தனைபேர் குருதி அறுத்தாலும்,
அதையும் தாங்கும் இதயம் நான்!

அரசியலென்றும், திட்டமென்றும்,
கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும்,
அதையும் ரசிக்கும் நல்ல ரசிகன் நான்!


ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டை வீசும் வள்ளல் நான்!
இன்னும் ஆயிரம் கொடுத்தல்ஓட்டுச்சாவடியை நொறுக்கும் விசுவாசி நான்!
ஒட்டு முடிந்த அடுத்தநாள் ஓட்டாண்டியாகும் ஞானி நான்!

என்னுடைய பொறுமை.. தமிழனின் பெருமை!
என்னுடைய பொறுமை.. ஒரு ஈடில்லா உவமை!
இது எங்கள் தமிழ்நாடு.. ஊழல், கொள்ளை இல்லாத,
சமுதாய ஒழுக்கம் மட்டுமே மூச்சென முழங்கும் ஒரு நாடு!”

நாதியில்லை நாதியில்லை தட்டிக்கேட்க நாதியில்லை!

பேருந்தில், நிறுத்தத்தில்,  கடற்கரையில், கல்லடியில்..

தனிதடத்தில், மறைவிடத்தில்..

கோவில்கள், பாலங்கள், பூங்காக்கள்,  புதர்கொடிகள்..

எனநீளும் எல்லையில்லா எரிச்சல்களை எச்சில்களை,

காம கருமங்களை, நாய் காதல்களை,

வேடிக்கை தவிர்த்து, எட்டி உதைத்து , காரி உமிழ்ந்து, முடி அறுக்க,

எனக்குத்தெரிந்து எங்கும் இதுவரை நாதியில்லை !

Love hearts
www.vaikaitamil.tk

கனவுகண்டேன் நான்!

இறுகி கவ்வியிருக்கும்
இரைத்தவளை பாம்பாய்,
எனை பின்னிப்பிணைந்திருந்த
கவலைகள் அனைத்தும்
இடி விழுந்ததாய் பதறியோட
ஒரு கனவுகண்டேன் நான்!

இமைகள் எனும் மயிர் நுனிகளில்
தேங்கி நின்ற கண்ணீர் துளிகள்,
இறுதியாய் என் வருத்தங்களோடு கரைந்தோட
நிரந்தரமாய் ஒரு கனவு கண்டேன்!

இதுதான் வாழ்க்கை..
இப்படித்தான் வாழ்க்கை…
எத்தனைபேர் கூற கேட்டதுண்டு.
அதை இன்று முற்றிலும் புரிந்தவனாய்,
புத்தம் புதிதாய் ஒரு கனவு கண்டேன்!

ஐம்பூதங்களும் அடங்கியதாய்,
என் திசைகளும் என்னசைவில் ஒடுங்கியதாய்,
எனக்குள் நான் இன்னுமொருமுறை புதிதாய்  பிறந்ததாய்
ஒரு கனவு கண்டேன்!

நேற்று வரை,
சென்ற நிமிடம் வரை,
எனக்கே எனக்கென காத்திருந்த கட்டுபாடுகள் அனைத்தும்
மழை நீர் மணலாய் கரைதகர்த்து ஓடியதாய்
ஒரு கனவு கண்டேன்!

இனி வருத்தங்களும் கவலைகளும்,
என்னை அடையாளம் கண்டு கொள்ள போவதில்லை!
கண்ணீர்த்துளிகளும் என்னை உறவு கொண்டாட போவதில்லை!
அனைத்தும் கரைந்துவிட்ட கற்பூரமாய்
இனி காற்றோடு கரையலாம்!
அதோ,
என் பிண்டம் வைத்து எரிக்கப்படும்
அந்த விறகு கட்டைகளின் சாம்பலோடு..
காற்றோடு கள்ளமொழி பேசும் அந்த புகையோடு..!

“ஆம்! நான் கண்ட கனவு சொல்லிச் சென்றது இது தான்!
வருத்தங்கள் …  மனிதனின் குருதியோடு கலந்த கருப்பு அணுக்கள்..”


நன்றிகளுடன்,
வி.பி.மறவன்!

Follow

Get every new post delivered to your Inbox.