யார் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன்? எதற்கு இவர்களுக்காக நாம் போராட்டம் நடத்த வேண்டும்? இவர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?

இந்த மூவரும் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சம்மந்தபட்டவர்களாக கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்
என்பது அனைத்து தமிழர்களும் அறிந்த ஒன்று. இவர்களின் கருணை மனுக்களை 11 ஆண்டுகள் “கலந்து கலந்து” ஆலோசித்த பின்பு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் ‘தமிழர்கள்’ முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. இதில் நளினியின் மரண தண்டனைமட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன் இவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது என்பது வருத்தமான செய்தி. இதனை எதிர்த்துதான் நம் இன ஆர்வலர்களும், மனிதநேய அமைப்புகளும், இளைஞர்களும், மாணவர் சங்கங்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த போராட்டங்களில், இவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தையும்தாண்டி நம் போராட்டங்களுக்கு இன்னும் இன்னும் எத்தனையோ இதயத்தை பிடுங்கி போடுகின்ற காரணங்கள் நம் கண்களுக்கு அப்பால் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. இவர்களை தூக்கில் போட எதிர்ப்பு தெரிவிக்கும் நமக்கு தமிழர்கள் என்ற இன உணர்வைதவிர தவிர வேறு காரணத்தை அறிந்துகொள்ள வாய்ப்புக்கிடைக்கவில்லை.
“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது”
இதனை உடைத்து கருத்தை வெளிப்படுத்துவதால் வரும் பிரச்சினைகளையும் சீமான் போன்ற இன உணர்வாளர்களின் சிறை வழ்கையிலிருந்தே பார்க்க முடியும்.
“விடுதலை புலிகள் செய்த மிகபெரிய தவறே ராஜிவ்காந்தியை கொலை செய்ததுதான்.” என்ற பொதுவான கருத்தை சற்று நாம் ஆராய்வோமானால், எதிர்மறைவாதிகள் இப்படி புரட்சிபாடுகிறார்கள்.
“நம்முடைய தந்தையை ஒருவன் கொலை செய்துவிடுகிறான் என்றால், ஒரு சாதாரண மனிதனாக நமக்கு உணர்ச்சிவயப்பட்டு ‘அவனை என்ன செய்கிறேன் பார்’ என்று சபதம் எடுப்போம், எனில், ஒரு நாட்டையே ஆளும் தலைவரை கொன்றால் அவர்களுக்கு (காங்கிரஸ்) எவ்வளவு கோபம் வரும் என எண்ணிப்பார்க்க வேண்டும்”
சரி நாம் எண்ணிப்பர்ப்போம்.
அதே நேரத்தில் அந்த தலைவர் (ராஜிவ்காந்தி), தன்இனத்தையே அழிக்க ஒருவனுக்கு ( இலங்கைக்கு )
உதவி செய்துகொண்டிருப்பதை ஒரு இனஉணர்வாளன் நடைமுறையில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இப்பொழுது இந்த வெள்ளை தொப்பி காங்கிரஸ்காரர்களுக்கு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக இருக்கும் ரோசம், அவர்கள் குடும்பத்தை, அவர்கள் மக்களை, தமிழர் இனத்தை ராஜீவ், இந்திய ராணுவம் என்ற பெயரில் கொன்றுகுவிக்கும்போது இந்த தமிழர்களுக்கு மட்டும் அன்று இல்லாமல் போய்விட வேண்டுமா??
அவனுக்கு மட்டும் சூடு சொரணை இல்லாமல் போய்விடுமா? இல்லை, தன் இனம் அழிவதை பார்க்காமல் கண்களை மூடிக்கொள்ள அவன் என்ன பிணமா? அப்படிப்பட்ட சாதாரண இன உணர்வுதான் இந்த மூவருக்கும் ஏற்ப்பட்டுள்ளதை எந்த முற்ப்போக்காளனும் உணர்வான். இங்கே, மனிதன் என்று வரும்போது மறைமுகமாக புகழை தேடிக்கொள்ளும் காந்திய, ஹசாரே ரீதியான அமைதிப்போரட்டங்களுக்கெல்லாம் அவர்கள் என்றும் ஆசைப்படுவதில்லை, உணர்வுகளுக்கே அடிமைப்படுகிறார்கள் என்பது நடைமுறை.
தன் நாட்டை சேர்ந்த ஒரு இனமே இன்னொரு நாட்டில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, இதை கண்டு ஒரு தலைவன் பொங்கி எழ வேண்டாமா? அப்படி இனம் அழிவதை தட்டிகேட்டு போராட்டத்தை வழிநடத்தி, மக்களை கப்பற்றுவதுதானே அந்நாட்டின் தலைவனின் முதல் கடமை. அதற்க்காகதானே அவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான்? இல்லை, தங்கத் தலைவர் வாழ்க, எங்கள் தலைவர் வாழ்க என்று, நாலு கைகளை வைத்துக்கொண்டு பாட்டுபாடவ? இதை இந்த ஒப்பற்ற தலைவர் ராஜீவ் காந்தி செய்தாரா??? பின்பு எப்படி ஒரு தமிழனாக இருந்து கொண்டு தங்கபாலு போன்ற ஆட்கள் வாய்கூசாமல் புகழ் படுகிறார்கள்?
தங்கபாலுவின் ‘தலை’ ராஜீவ்-க்கு, மக்களின் சுதந்திரத்துக்காக ஒருவன் ஆயுதப்போரட்டத்தை முன்னெடுக்கும்போது அதனை மரபுமீறி ஒடுக்கும் கொடூரத்தை, கூட்டு சேர்ந்து செய்து, தன் மக்களையே அழித்து ஒழிக்கும் அளவுக்கு அப்படி என்ன காரணம் வந்தது? ஆயுத போராட்டங்களை தடுத்து நிறுத்த உதவுகிறோம் என்ற பெயரில், ஆயுதத்தாலேயே தமிழ் இனத்தை அழிக்கும் எண்ணத்தோடே அண்டை நாட்டுக்கு ‘நட்புணர்வோடு’ ‘உதவ’ போன வெள்ளை தொப்பி தலைவருக்கு, சிங்களர்கள் இலங்கைக்கு பிழைக்க வந்த நாடோடிகள், தமிழனே இலங்கை மண்ணின் மைந்தன் என்ற வரலாறு எப்படி தெரிந்திருக்கும்?
தொப்பி வழிவந்த ராஜீவ் காந்தியிடம், தமிழ் பெண்கள் இந்திய ராணுவத்தால் கொடூரமாக கற்பழிக்கபடுவதைப்பற்றி எம் ஜி ஆர் அழுதுகொண்டே முறையிட்டதற்கு, ராஜீவின் பதில் என்னவென்று கேட்டால் நம் கொலையே நடுங்கும் அளவு கொடூரமாக இருக்கும்.
ராஜீவ் காந்திக்கும், ராஜபக்க்ஷேவுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. இருவருக்குமே அவர்கள் வாத்தியார்காள் மனிதநேயத்துக்கு அர்த்தம் சொல்லிதரவில்லை!
தொப்பியின் வழிவந்த அற்புத வாரிசுகள் கடைசிகட்ட ஈழ போரிலும் அதே வேலையை மறைமுகமாக செய்தது எந்த ஆச்சர்யமும் அளிக்கவில்லை!
ஒரு இனத்தையே, அந்த மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆண்களை கொன்று, பெண்களை கற்பழித்து, மண்வாசனை அறியாத குழந்தைகளைகூட கருவறுத்த இந்திய ராணுவத்தின் பெயரில் அழித்தொழித்த இந்த வெள்ளை தொப்பிகளுக்கும் இந்த உணர்வாளர்கள் மூவரின் உயிரா பெரிதாய் தெரிய போகிறது?
நம்மில் எத்தனைபேருக்கு தெரியும், இந்த மூவரின் தூக்கு தண்டனையின் பின்னணியும், பின்னணியில் உள்ளவர்களையும்? இதற்க்கு முன்னுதாரனமே, சட்ட திட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒப்பற்ற சட்ட வல்லுநர், ‘தமிழ் தலைவர்‘ தங்கபாலுவின் சமீபத்திய பேட்டி.
இப்பொழுது சட்ட திட்டத்துக்காக தலை தூக்கும் இது போன்ற பெருச்சாலிகள், ஈழ போர் நாடந்துகொண்டிருக்கும்போது எங்கே போனார்கள்? ராஜபக்ஷேவுக்கு எதிராக பன்னாட்டு அமைப்புகளிடம் புகார் கொடுக்க தமிழர்கள் குரல்கொடுத்தபோது எந்தபொந்துக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்? தன் சுய ஆதாயத்துக்காக பேசும் இதுபோன்ற ஆட்கள், கொஞ்சம் தன்மான உணர்வைப்பற்றி யோசித்தால் நன்றாக இருக்கும்.
தமிழ் உணர்வாளர்களான இந்த மூவரின் நிலை உண்மையிலேயே வருந்ததக்கதுதான். தங்களுக்காக, தங்கள் இன உணர்வை புரிந்து தாங்கள் 20 ஆண்டுகளாக இனத்துக்காக ஏற்றுக்கொண்ட தண்டனையை மனதில்கொண்டு, தமிழக அரசு ஏதாவது செய்யும் ,மனிதநேயம் தலைகாட்டும் என்ற நம்பிக்கையில் இன்று சிறையில்காத்திருக்கின்றனர் மூவரும்.
இதுவரை ஈழத்தமிழர் விவகாரத்தில் மனப்பூர்வமாக உதவ முனைந்தவர் மறைந்த தமிழக முதல்வர் MGR – தான் என்பது உண்மை.
விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார் என்று அவரின் நண்பர் புலமை பித்தன்கூட ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஒருகட்டத்தில் தமிழீழ போராட்ட வீரர், பிரபாகரனை சந்தித்த M.G.R, பிரபா அவர்களிடம் “ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வரை தேவைப்படும்?” என்று கேட்டார். பிரபாகரன் கொஞ்ச நேரம் யோசித்து “நூறு கோடி வரை தேவைப்படும்” என்றார். “சரி பார்க்கலாம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.
அதிகாரத்தில் இருந்த தமிழக அரசியல்வாதிகளில் MGR மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.அவருக்கும் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயமும் இருந்ததை மறுக்கமுடியாது. இதில் அன்றும் காங்கிரஸ்தான் மத்தியில் இருந்ததை மறக்கமுடியாது.
ஒரு போர் என்று வரும்போது ஒரு நாடு தன் ராணுவத்தால் எதிரியை பாரபட்சமில்லாமல், மனிதநேயம் துளிகூட எட்டி பார்க்காமல் குருதி பீறிட சுட்டு வீழ்த்துவது இல்லையா? தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை, அவர்கள் சுதந்திர போராட்டத்தில், ராஜீவ் காந்தி அவர்களுக்கு எதிரியாக இருந்திருக்கிறார். ‘நிறைய’ செய்திருக்கிறார். வீழ்த்தப்படிருக்கிறார் என்பது அவர்கள் பாணியில் உண்மை.
மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது,
இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட
இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக
பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய
சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட
என் தமிழ்ச்சாதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?
தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா?”
என்ற காவிரி மைந்தனின் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
தமிழர்களுகே தெரியும். அவர்களின் தன்மானமும், அவர்கள் வெளியிடத்துணியாத மனவேதனையும், அவர்களின் தீர்ப்பும்.