என் மனிதனே,
எங்கே செல்கிறோம் இவ்வுயிர் கொண்டு,
எதற்கென்று தோன்றாத எழுத்தறிவு கொண்டு!
படுக்கவும், படிக்கவும், கெடுக்கவும், பேசவும்,
உணரவும், புணரவும், எழுதவும், கற்கவா வாழ்க்கை?!
மரங்கள்கூட நிழல் கொண்டு,
மனிதன் நித்தமும் வஞ்சு கொண்டு!
மனிதநேயம், மண்ணாய் கிடக்கிறது குப்பைமேட்டில்!
இடையே வந்துவிட்டதாய்,
இனப்பற்றும், மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும்!
“இனம் கண்டும் காணாமல் குருதியால் குணரப்பட்டு,
இறுதியை நோக்கி இனப்பற்று!
மொத்தமாய் கலப்படத்தின் முழுவடிவம் கொண்டு,
முழுவேக பரிணாமத்தில் மொழிப்பற்று!
நாட்களில் ஒருநாள் நான்கினிப்புடனும் ஒட்டுக்கொடியுடனும்
நெஞ்சிலே குத்திக்கிழிக்கப்படுகிறது நாட்டுப்பற்று!”
பற்றேன்றேதுவும் வேண்டாம்.
இனியாரும் பற்றி எறியவும் வேண்டாம்!
நேயம் கொள். மனிதநேயம் கொள்!
மனிதனாய் பிறந்ததால் நேயம் கொள்!
இனியேனும் குருதியின் பாய்ச்சல்,
பசியாற்றவாய் மட்டுமிருக்கட்டும்!
பகையென்ற சொல்லை கொன்று நீ,
இனி மனிதனாய் இல்லையெனும் மரங்களாய் வாழ்.
உன் மனதினை கொல்லாமல்!