கடவுளை கடந்து செல் – பகுதி 4!

http://gravitasfreezone.files.wordpress.com/2008/03/happy-sad-faces.jpg
சரி. ஒரு வழியாக நமது மக்களின் மனதை கொஞ்சம் படித்து முடித்துவிட்டோம்.
நமது பேட்டிகள் ஒவ்வொன்றும் முதல் பேட்டியை போல தேநீர், நொறுக்கு தீணிகள், உபசரிப்புகள் என்றபடி ஒன்றும் இருக்க செய்யவில்லை! கிடைத்த வாய்க்கால் வரப்புகளும், பேருந்து நிறுத்தங்களும், பொழுதுபோக்கு இடங்களுமே இங்கே கடவுளின் காரணங்களாக பதிவாகி உள்ளன.

ஒவ்வொரு சகோதர, சகோதரிகளிடமும் நாம் அதே ஐந்து கேள்விகளை கேட்கலானோம். பதில்கள் கொஞ்சம் புயலாவும், சிலரிடம் அதுவே தென்றலாகவும், சிலரிடம் இரண்டும் கலந்தபடியும் வெளிப்பட்டன.

அடுத்தபதிப்பில் ( இந்த பதிப்பில்) ஆன்மீக போர்வையிலுள்ள முட்டாள்களை மட்டுமே விமர்சிக்க வேண்டுமா? பகுத்தறிவாளி போர்வையில் வெறியர்களை ஏன் விமர்சிக்கக்கூடாது, என்ற கேள்வி எழவே, இங்கு பகுத்தறிவல சிங்கங்களும் சிக்குகிறார்கள்.
இதனை இங்கே சொல்ல கடமைப் பட்டுள்ளேன். சென்றமுறை நாம் எழுதிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பற்றிய பதிப்பு அவரை என்னை அழைத்து பேச வைத்தது. அவர் பேசியதில் குறிப்பிட வேண்டுமாய் நான் விரும்புவது இதுதான்.

” மறவன். நீங்க எதோ வீட்டு பக்கமா வந்ததால சும்மா வலைதளத்தில் போட பேட்டி எடுக்க வந்திங்கன்னு நெனச்சேன். படிச்சுட்டு என்ன பேசறதுன்னு தெரில. என்ன நல்லாவே உன்னிச்சு கவனிச்சு எழுதிருக்கிங்க. சில தவறுகள் புரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா, ரொம்ப காலம் என்னோட இருக்குற நம்பிக்கை ஆச்சே. அதான் கடவுள் நம்பிக்கையை விட முடில. நீங்க சொன்ன வீட்டு முன்னாடி இருந்த கரி மிளகாய் கயிறு எல்லாம் எடுத்துட்டேன். பரவ இல்ல. நல்லாவே உங்க வேலைய பக்குரிங்க. நீங்க செஞ்ச ஒரே நல்ல காரியம் என் பேரை போடல. அதுவரைக்கும் சந்தோசம்.”

சரி. அவர் பேசி முடிக்கும் வரை நான் சும்மாவா இருந்திருக்க முடியும்.. ஆறேழு மன்னிசுடுங்கவையும் ( தவறா எழுதியிருந்தா.) ரெண்டு மூணு நன்றியையும் போட்டு வச்சேன். ( என்ன பண்ண கொஞ்சம் பெரிய ஆள் ஆச்சே!)

ஐயா, நீங்க இந்த பதிவ படிச்சாலும் ஒன்னு சொல்லிடறேன். நான் எழுத உக்காந்த கொஞ்சம் எல்லை மீறி போவேன். எனக்கு அது பிடிக்கும். எழுத்தளர்களுக்கு ( ஹா ஹா ஹா ) பிடிச்ச குணம் இல்லையா!

அப்புறம்…! விஷயத்திற்கு வருவோம்.
நமது போட்டியாளர்களை ( மன்னிக்கவும் பேட்டியாளர்களை) இந்த ஒருபதிப்புக்குள் அடக்க முடியவில்லை. ஆதலால், கொஞ்சம் கடினவயப்பட்டாலும் அவர்களின் மனதின் எண்ணங்களைமட்டும் பதிவாக விளக்கத் தொடங்குகிறேன்.

ஆன்மீக புலிகள்:
குறிப்பாக நாம் பேட்டிகண்ட மனிதர்களை ஏற்க்கனவே சொன்னதைப் போல் மூன்று வகையாக பிரிக்கலானோம்.

1. வறுமை கோட்டுக்கு கீழ் கண்டவர்கள்.
2. நடு நிலை வசதி பெற்றவர்கள்.
3. வசதிகளில் உயர்ந்தவர்கள்.
இதில் கொஞ்சம் சிரிப்புடன் சிந்திக்க வேண்டிய விஷயம், ஹிந்து மதத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கடவுள்கள் ஏழையாகவே இருக்கின்றன. அதாவது அவர்களின் கடவுள்கள் அதிகமாக, சாலையோரங்களிலும், கூரை வேயப்பட்ட குடில்களிலும், ஆழ்ந்து உயர்ந்து வளர்ந்த மரங்களின் கீழும் இருப்பிடம் கொண்டுள்ளன. இவர்களின் கடவுள் சில முரடட்டுத்தனமான வேண்டுதல்களை கேட்க்கும் கடவுளாக உள்ளார்! ஏதாவது அதீத குறிப்பேட்டு நாட்களில் மட்டும் அவர்களின் கடவுள் வரிசையில் நின்று தரிசிக்க வேண்டிய பணக்கார கடவுளாக அவதாரம் எடுத்துவிடுகிறார். அன்று அவர்கள் பொதித்துவைத்த சில செல்வங்களும் உண்டியளுடனோ, வேண்டுதல்களுடனோ யாரோ ஒருவருக்காக கலக்கப்பட்டுவிடுகிறது. உழைப்பெல்லாம் வீணா போச்சேச்சேச்சே..! கதையாகி விடுகிறது..

அடுத்து, வசதிகளில் உயர்ந்தவர்களின் கடவுள். இவர் அதிகபட்சமாக என்றுமே பணக்காராக மட்டுமே இருக்கிறார்! அவருக்கு மூன்று நேரங்கள் உடை அலங்காரம், அணிகலன்கள், அபிஷேகங்கள், அடிபணிவுகள் என்று அனைத்தும் பெற்றுத்தரப்படுகின்றன. அவர்களின் கடவுள் முக்கிய மனிதர்கள் வழிபாட்டுக்குள் (VIP Dharsan) அடங்கிவிடுங்கின்றன. விக்ரகத்தின் கருவறைக்குள்ளேயே மனிதர்களுக்கு மரியாதைகள் வழங்கப்பட்டுவிடுகின்றன. ஏறத்தாழ இருவரும் ஒரே ஜாதி. பணக்கார ஜாதி என்று சொல்லுமளவுக்கு அவர்கள் நண்பர்களாக மாறிவிடுகிறார்கள்.
வேண்டுதல்களை பொறுத்தவரை, அதிக மும்மூச்சு வழிபாடுகளோ அல்லது உடலை வருத்திக்கொள்ளும் வழிபாடுகளோ இவர்களுடன் கொஞ்சி குலாவுவது இல்லை!
சரி நடு நிலை வசதி பெற்றவர்கள்? அவர்களின் கடவுள் நடுநிலையாகவே இருக்கிறார்! கடவுளானவர் வணக்கம் சொன்னால் திருப்பி வணக்கம் மட்டுமே சொல்லும் குனமுடையவாரக இருக்கின்றனர். அதிகமாக கோவில்களுக்கென மெனக்கெடுவதில்லை என்றாலும், வழிபாடு, வேண்டுதல்களில் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.

அதாவது சிறிது திறந்த மனநிலையோடு சொல்ல வேண்டுமெனில்,
1. பணக்கரகளின் கடவுள், பணக்காரராக மட்டுமும்,
2. நடுத்தரவர்க்கத்தின் கடவுள் ஏனோதானோ என்றும் அதே நேரம் வேண்டுதல்களில் மிக உடன்பாடு கொண்டவர்களாகவும்,
3. ஏழைகளின் கடவுள் எந்த வசதியிலும் வாழக்கூடிய முரட்டுத்தனமான கடவுளாகவும் இருக்கிறார் என்பது முடிவு.

சரி. ஆன்மீகவாதிகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
இப்படியொரு கேள்விக்குமான பதில் எனக்கு கிடைக்கலாயிற்று. ஆன்மீகவாதிகள் என்பவர்கள் அதிகமாக மனஅமைதியை நாடுபவர்களாகவும், தன்னம்பிக்கையற்றவர்களாகவும், சுற்றங்களை அதிகமாக நம்பதவர்களாகவும், உதவிகள் செய்யும் குணமுடையவர்களாகவும், தன்னைசுற்றி என்றும் ஏதோ பாதுகாப்பு வேண்டும் பயப்படுபவர்களாகவும், உண்மைக்கு அப்பாற்ப்பட்ட கற்பனை விஷயங்களில் நாட்டம் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்களின் உலகம் ஒரு மாய உலகமாக இருக்கிறது.

இவர்களை பொறுத்தவரை நோக்கம் இதுதான். ஆன்மிகம் மட்டுமே ஒரு மனிதனுக்கு அமைதியான வாழ்வை தரமுடியும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் உண்மையில் அளவு தெரியாமலேயே நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். கடவுள் என்ற நடைமுறை அனுபவம் இல்லாத ஒன்றை அப்படியே ஈற்றுக்கொள்ள வேண்டும்.

பகுத்தறிவாள சிங்கங்கள்:
இங்கே சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு விஷயத்தை ஆதரிப்பவர்களை விட, அதனை எதிர்ப்பவர்களின் கை என்றுமே சற்று ஓங்கி இருக்க வாய்ப்புண்டு. அந்த ஆதரிக்கும் விடயத்தில் சரியான, தீர்க்கமான முடிவுகளோ, வரை முறைகளோ இல்லை என்றாலும் அதனை ஆதரிக்க ( அது எதுவாக இருந்தாலும்) ஒரு கூட்டம் என்றும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட கூட்டத்தை ( அதன் கருத்துக்கள் சரியாக இருந்தாலும் கூட) எதிர்க்கும் கூட்டமும் மெல்ல மெல்ல ஒன்று உண்டாகும். இது தனித்தனி மனிதர்களின் அடிமனத்தின் உந்துதல்களால் ஏற்ப்படும் சாதாரண விளைவு.
இதன் இடைப்பட்டபுள்ளியில் நின்று சிந்தித்தால், ஒரு ஆதாரமில்லாத, வரைமுறைக்கு உட்படாத ஒன்றை வெறித்தனமாக ஈர்ப்பெடுத்துக்கொள்ளும்போது, அதனை சிந்திக்கும் மனநிலை, எண்ணங்கள், அது தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய சாதாரண அறிவுகூட நம்மைவிட்டு விலகி செல்ல ஆரம்பிக்கின்றது.

அதுபோல்தான், கடவுள் என்ற ஒரு நம்பிக்கைக்காய், என்ற ஒரு மாயைக்காய், என்ற ஒரு மூட நம்பிக்கைக்காய் ( உட்ப்புகுந்து யோசித்தால் அர்த்தம் புரியும்.)
தன்னால் யோசிக்கமுடியாத, செய்ய தேவை இல்லாத, முட்டாள்களாய் சில விசயங்களை செய்வது. ( எ.கா: மீண்டும் கூறுவது இதுதான். தன்னால் வேர்வை சிந்தி அடைந்த செல்வங்களை, உருப்படி உணவு சில நேரம்கூட இல்லதவன் ஆயிரக்கணக்கில் செலவு செய்து அழைத்துவரப்படும் ஊர்தேரின்மேல் வீசுவது…) இதனைஆட்சேபனை தெரிவித்து புரிய வைக்க வேண்டிய காட்டயத்தில் உள்ளவர்கள், இங்கே பகுத்தறிவாளர்கள் என எண்ணலாம்.

அதைவிடுத்து  பகுத்தறிவாளர் போர்வையில், ஆன்மீகத்தின் மூடநம்பிக்கை பிரிவிலிருந்து தனியே சிக்கும் சிலரை, மனதை புண்படுத்தும் நோக்கில்,  சொல்ல வந்த கருத்துக்களை புரிய வைப்பதை தவிர்த்து, அதனை கையாளும் விதம் தெரியாமல், அவர்களை பகுத்தறிவு என்றால், அசிங்கமான ஒன்றென்று எண்ணவைக்கும் வகையில் அதற்க்கான உதாரணங்கள் தருவது ( சிவ லிங்கம்), தன்னை பெரிய பகுத்தறிவாளி என்று காட்டிக்கொள்ள ( ____ தாசன்) பெயர்கள் வைத்துக்கொள்வது, பகுத்தறிவை தெளிந்துகொள்ளவந்த சிலரையும் குழப்பிவிடுவது போன்றவை பகுத்தறிவாள சிங்கங்கள் செய்யும் வேலைகள்.
அதுமட்டுமில்லாமல், பகுத்தறிவை ஒரு பாடமாக கற்ப்பிக்க விளைவதை மறுத்து, பகுத்தறிவுக்கு சம்மந்தமே இல்லாத முட்டாள்தனமான முரட்டு வேலைகளை கையாள்வது போன்றதும் பகுத்தறிவாள சிங்கங்கள் செய்யும் வேலைகள்தான்.

பொதுவாக பகுத்தறிவை பக்ககம் பக்கமாக கட்டுரை எழுதி நிரூபிக்க வேண்டிய அவசியங்கள் இல்லை. பகுத்தறிவு என்பது, ஒரு விடயத்தை ஆழ்ந்து யோசிப்பது. கைக்கு ஒரு கைப்பேசி வாங்க மணிக்கணக்காக பலமணிநேரம் யோசிக்கும் நம்மால், நம் வாழ்க்கைமுழுதும் பின்தொடரும் அந்த கடவுள் என்ற நம்பிக்கையை  ஆராய ஒரு மணி நேரம்கூட எடுத்துக்கொள்ளதது வருத்தமளிக்கவே செய்கிறது.

இந்த தடவை எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடணும் அல்லது போடக்கூடாது; நீ ஓட்டு போட்டது சரியான முடிவல்ல – இப்படி எதைப் பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் (sabath day for jews) சனிக்கிழமை நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்றால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது; ஏனெனில், அது மதம் தொடர்பானது; மதம் அதனை வரைந்திருக்கிறது.  கேள்வி கேட்காமல் அதை மதிப்பதே சரி!
சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது?

விவாதிப்போம். மறவன் பயந்தவன் அல்ல!

கடவுளை கடந்து செல் – பகுதி 3!

கடைசி பதிப்பில்.. ஒரு மாநிலத்தின் பொறுப்புகள் மிகுந்த  ஒரு அரசியல்வாதியை சந்தித்த நாம்..  மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களை சந்தித்தோம்.. அதன் பதிவுகளை மிக விரைவில் அளிக்கிறேன்..

அதன்முன்பு ஒரு சின்ன தேடல். உலகிலுள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள், பகுத்தறிவாளிகள். இதில் யாருடைய வாழ்வாதாரம் போதுமான அளவு உள்ளது?

என் தேடலில் சிக்கிய தீர்வுகள் இவையே..

ஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது

கடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜிலும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல!

கடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும். இதை பறைசாற்றவே இந்த என் எழுத்துக்கள்!

கடவுளை நோக்கிய வேண்டுதல்கள் / நம்பிக்கைகள்.. ஒரு ஆதாரபூர்வமான சோதனை!

கடவுள் நம்பிக்கையை தோண்டி துருவ, முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது பிரான்சிஸ் கல்தோன். இவர் டார்வினின் சகோதராக இருக்கலாம் என கருதப்படுபவர். ( அது குடும்ப பிரச்னை, நம்ம பிரச்சனைக்கு வரலாம்.)

2006-ம் ஆண்டு  பகுத்தரிவாளிகளின் சோதனையை ஒரு அறிவியல் சோதனை மேற்கொள்ளப் பட்டது: H.Benson et al. “Study of the therapeutic effects of intercessory prayer (STEP) . நடத்த பொருளுதவி செய்தது மதச்சார்புள்ள டேம்ப்லேடன் Foundation. இதற்காக செலவிடப்பட்ட காசு 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்!

இதில் மூன்று குழுக்களாக நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களாம்; மொத்தம் ஆறு மருத்துவ மனைகளிலிருந்து 1802 நோயாளிகள்; எல்லோருமே coronary bypass surgery செய்து கொண்டவர்கள். ஒரு குழுவிற்காக கூட்டு வழிபாடு நடந்தது (experimental group); இன்னொரு குழுவிற்கு(control group)அப்படி ஏதுமில்லை. யார் யாருக்காக வழிபாடு நடக்கிறதென்பது நோயாளிகளுக்கோ, மருத்துவர்களுக்கோ,யாருக்குமே தெரியாது. வழிபாடு நடத்துபவர்களுக்கும் கூட நோயாளிகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே.

நோயாளிகளில் மூன்றில் ஒருகுழுவிற்காக வழிபாடு நடந்தது; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.(Experimental Group). இரண்டாவது குழுவிற்காக வழிபாடு ஏதுமில்லை; அவர்களுக்கு அது தெரியாது. (Control group). மூன்றாவது குழுவிற்காக வழிபாடு நடந்தது; அது அவர்களுக்கும் தெரியும்.

மூன்று குழுக்களுக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமுமில்லை என்பதே American Heart Journal-ன் ஏப்ரல் 2006-ல் வந்த முடிவு.

சில நோயாளிகளுக்கு மட்டும் தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பது தெரியும். இதில் ஆச்சர்யதக்க விஷயம் என்னவென்றால், தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பதைத் தெரிந்திருந்த நோயாளிகள் மற்ற நோயாளிகளை விடவும் அதிகமான உடல் கேடுகளுக்கு உட்பட்டார்கள். ஒருவேளை அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்பட்ட அதீதமான டென்ஷனும் காரணமாக இருக்கலாமோ!? ஒரு ஆராய்ச்சியாளர், ‘பொதுவழிபாடு நடத்த வேண்டிய அளவிற்கு தங்கள் உடல் நிலை மோசமாக இருக்கிறதோ’ என்ற அச்ச உணர்வுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.

கேலியும் கிண்டலும் செய்யப்படுவதற்கான ஒரு ஆராய்ச்சிதான் இது. அதுபோலவே நடக்கும்போதும் நடந்து முடிந்த போதும் பலவிதமாக இந்த ஆராய்ச்சி கேலி செய்யப்பட்டது. அதைப் போலவே முடிவுகள் தெரிந்த பிறகு பலவித காரண காரியங்கள் கடவுள் என்றொரு நம்பிக்கைக்காய் தரப்பட்டன.

கடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார் இல்லையா? அதனால்தான் இதில் அவர் கருணைகாட்டவும் இல்லை. என்ற கூற்றுகளும் எழவே செய்ததாம்.

சரி மீண்டும் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை இங்கே எழுப்புவோம். ( இந்தக் கேள்வி மூட நம்பிக்கையை களையவே ஆகும். எப்பொழுதும் மதங்களையோ, கடவுள்களையோ கிண்டல் செய்ய அல்ல.)

அறிவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது,

1.தொட்டுணரும் பொருள்,

2.உணர்தலால் உணரும் பொருள்.

ஆகிய இரண்டு விஷயங்கலாலனது. உடனே கடவுளை உணர்தலால் உணரும் பொருளாய் அடைக்க முர்ப்படக்கூடது.

பொதுவாக தொட்டுணரும் பொருள் என்பது கல், கண்ணாடி, கட்டை, நான், நீங்கள் ( கையால் தொட்டு உணரக்கூடியவை)  இவைகளை ஆதாரமாகப் அறிவியல் தனிமங்கள் ( கார்பன், துத்தநாகம், பொட்டாசியம்.). இன்னும பதம் பிரித்துப் பார்த்தால் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள. இந்த ட்ரான்களை இன்னும் நுட்பமாக ஆராய்ந்தால் க்வார்க்குகளால் அமைந்த ஹேட்ரான்கள்,லெப்டான்கள் என்று வகுத்திருக்கிறார்கள்.

சரி உணர்தலால் உணரும் பொருள்? காற்று, புவி ஈர்ப்புவிசை, வலி இவற்றை போன்றது.

உணர்தலால் உணரும் பொருளில் கடவுளை அடைக்க நாம் முற்ப்பட்டால், இந்த இரண்டாம் குறியிட்ட உணர்தலால் உணரும் பொருள், தொட்டுணரும் பொருளால் வரையறுக்கப்படுகிறது. அதாவது அதுவும் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள ஆகியவற்றால் கட்டுட்டண்டவையாகவோ அல்லது ஏற்ப்படுத்தக்கூடியவையாகவோ இருக்கிறது. கடவுளை இப்படி உணர்தலால் உணரும் பொருளில் அடிக்கும்போது, கடவுள் என்ற நம்பிக்கையானது ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள ஆகியவற்றின் சொல் பேச்சின்படி நடப்பதாக வரையருக்கப்பட்டுவிடுகிறது

ஆனால் எந்த மத, இன கோட்ப்படுகளோ, நம்பிக்கைகளோ.. கடவுள் என்ற நம்பிக்கை பொருளானது இன்னொன்றை சார்ந்து இருப்பதாக கூறுவதுமில்லை.. கூறவும் செய்யாது. கடவுள்கள் அறிவியலை பொருத்தமட்டில் ஒரு நம்பிக்கையே.. அந்த நம்பிக்கையை, நம்பிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்காக உங்கள் வாழ்வையும், உங்கள் உடலையும் மெனக்கெட செய்வது, சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள் என உயிர்த்துளி கொடுத்து ஈட்டிய பொருளை எங்கோ எறிவது போன்றது விமர்சிக்கமுடியாத முட்டால்தனகள் ஆகும்!

சிந்தியுங்கள்! இனி வருவார்கள் ஆத்திகப் போர்வையில் மூட நம்பிக்கை புலிகள்!

கடவுளை கடந்து செல் – பகுதி 2

கடவுள் – கருதுவதற்கே..! சரி. கடவுளை எப்படி கருத வேண்டும்? கருதப்படும் கடவுளின் நோக்கம் என்ன? இப்படி ஒரு கூற்று எழுப்பப்படும்போது..

1. எப்படி சில விடயங்களும் ( பகுத்தறிவாளர்களால் அணிச்சையான செயலென்று கருதப்படுவது) மக்களை கடவுள் இருக்கிறார் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, அவர்களின் யோசிக்கும் திறனை முடக்குவதாக நடந்துவிடுகிறது?
2. கடவுள் நம்பிக்கையாளரால் எப்படி ஒரு பிரார்த்தனை இடத்திற்கு சென்று வந்த உடனாகவோ அல்லது ஜெபம் செய்த உடனாகவோ நாம் முழுசுகம் அடைந்தவராக உணர முடிகிறது?
3. கடவுளை எண்ணியவுடனேயோ அல்லது கற்பனை வடிவங்களின் வாயுலாக கண்டவுடனோ மனது எப்படி அமைதி பெறுகிறது?

என்பதுபோன்ற கேள்விகளின் விடைகளே கடவுளை கருதுவதற்கான காரணியை நிர்ணயிக்கின்றது.  இதனைப்பற்றிய மக்களின் மனம் அறியவும், அவர்களின் நம்பிக்கை முறைகளை அறிந்துகொள்ளவும் கொஞ்சம் ஆழமாக இறங்கி ஆராய்ந்தோம். அதில் நாம், முதலில் தெரிவுசெயதவர்கள் அனைவரும் மிக அதிகமான, பகுத்தறிவு என்றால் என்னவென்று வினவக்கூடிய உயர்மட்ட வாழ்வின் ஆன்மீகவாதிகள் மற்றும் பகுத்தறிவை ஆராய நேரமில்லாத வறுமை கோட்டிற்கு அருகில் வாழும் கடவுள் நம்பிக்கையாளர்கள்.

அவர்களிடம் பகிரப்பட்ட  ஆய்வுகள் இவைதான்.

1. கடவுள் என்பவர் யார் அல்லது எது?

2. உங்களின் கடவுள் எங்கே இருக்கிறார்?

3. நீங்கள் சுட்டும் கடவுள் எதுஎதுவெல்லாம் கொடுக்கமுடிகின்றவர்?

முதலாக கருத்தை பகிர்ந்தவர், பகுத்தறிவு என்று ஆரம்பித்தாலே பகுத்தறிவாளிகளை திட்ட ஆரம்பிக்கும் நபர். அதீத கடவுள் நம்பிக்கையுள்ள ஹிந்து மதத்தை சார்ந்தவர். வடக்குத் தமிழகத்தின் புகழ் பெற்ற அரசியல்வாதி. முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்.
அவரின் முந்தய அறிமுகமே இருந்தாலும்.. இந்த அறிமுகத்தை புதுமுகமாகவே அவருக்கு மீண்டும் அறிமுகமாக்கிக் கொண்டேன்.”வாங்க மறவன். எப்படி இருக்குறீங்க?” என்று ஆரம்பித்தவர் நாம் கடவுள் பற்றிய கட்டுரைக்கான தேவையை சொன்னவுடனேயே ஒருதினுஷாக, விவரிக்க முடியாதபடி ஒரு பார்வையில் பார்த்தார்.. பின்பு மென்மையான புண்ணகையோடு இப்படியாக பேச ஆரம்பித்தார்.
‘ காத்து இருக்குன்னு அத சுவாசிக்கத்தான் முடியும். அத கண்ணுல காட்டுனா எப்படி காட்ட முடியும்?’ பலமுறை கெட்ட சொர்த்தொடரானாலும்.. நமது முதல் கேள்வியை எந்த பகுத்தறிவுமின்றிஅவருடனே ஒன்றி கேட்கலானோம்.
“உங்களை பொறுத்தவரை கடவுள் என்பவர் யார் அல்லது எது?
அவர் சொன்ன பதிலின் விளக்கம் இப்படியாக இருந்தது. நமக்கு நம் பெற்றோர்களை தெரியும். பெற்றோர்களின் பெற்றோர்களையும் தெரியும்.  அவர்களின் பெற்றோர்களையும் தெரியும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்க்கு முந்தைய சந்ததியனரைப் பற்றி துல்லியமாக தெரிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ithil அவர் சொல்ல வந்தது இதுதான். நமக்கு அறியாத அந்த முந்தய சந்ததியினர் நம்மால் அறியப்படவில்லை, பார்க்கப்படவில்லை என்பதற்காக, அப்படியொருவர் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
ஆகவே மக்களால் கடவுளை பார்க்கத்தான் முடியவில்லை எனினும் அறிந்திருக்கிறார்கள்.
இல்லை. பார்க்கத்தான் வேண்டும் என்றால், அவர்கள் நமது முதாதையர்களோடு இராமன், கிருஷ்ணன் போன்ற பெயர்களில் வாழ்ந்திருக்கிறார்கள். இதை மறவனும் ஒத்துக்கொள்வர் ( இதில்தான் எனக்கு அதிகமான முரண்பாட்டுக்கருத்துக்கள் உண்டு). அவர்களின் விருப்பம் அதுவாக இருந்தது வாழ்ந்தார்கள். இப்போதான அவர்களின் விருப்பம் அதுவாக இல்லை. அதனால் நமக்கு எந்த தரிசனமும் தராமல் தன்னைத்தேடி வருபவர்களுக்கு மட்டும் ( கோவில்) இல்லை என்று சொல்லாமல் கேட்டதை எல்லாம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே கடவுள் எது என்பது கேட்பதே முட்டாள்களின் ஒரு கேள்வியாகவும் அவர் விளக்கினார். அதாவது அவரின் கருத்து சுருக்கமாக, அவரை பொறுத்தவரை கடவுள் என்பவர் எதுவும் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர் ( அனைத்து ஆத்திகத்தின் அறிவற்ற கருத்தைப்போலவே). பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய மற்றும் இதில் அடங்காத  எதனையும் ஆழ்பவர். அவரே உலகத்தின் அரசர் ( பிரபஞ்சம் குறிப்பிடப்படவில்லை. உலகத்திற்கு மட்டுமே கடவுள் சொந்தமானதாக விளக்கப்படுகிறது). அரூபம் உடையவர் ( ஆனால் மானிடப் பிறவியும் எடுப்பார்). அனைவரையும் அவரவர் செய்யும் தண்டனைக்காக காலம் வருகையில் தண்டித்துக்கொண்டிருப்பவர். ( எமலோகம் என்ற ஒன்று அடிக்கடி வேதங்களில் வருவதாக ஞாபகம். அங்கே யாருக்கும் வேலை இருக்காது போல.)

அடுத்த கேள்வி ” உங்களின் கடவுள் எங்கே இருக்கிறார்?
“உனது உயிர் எங்கே இருக்கிறது?” இப்படியான ஒரு கேள்வியை கேட்டு நம்மை மடக்க முயற்சித்தார். கொஞ்சம் சுதாரித்த நான், இப்படியாக பதில் வர ஆரம்பித்தது.
” உயிர் என்பது எந்த ஒரு தனியான இடத்திலும் இருத்திவைக்கப் படவில்லை. அது உடலின் ஒவ்வொரு பாகங்களின் ( இதயம், மூளை, ஈரல்)  இயக்கத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள ஒவ்வொரு செல்லின் இயக்கத்திலும் இருப்பதாக அறிவியலால் நிருபிக்கப்பட்டுள்ளது”
இவ்வாறாக முடிக்கலானேன்
.
கொஞ்சமாக யோசித்த அவர். ” உயிர் எப்படி உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறதோ, அவ்வாறே கடவுளும் உலகின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறார். ( ஒரு இடத்தில்கூட அவர் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்கவோ அல்லது ஆத்திகத்தை விட்டுக்கொடுக்கவோ தயாராக இல்லை). அவர் அங்கே இயங்கவில்லை எனில் இங்கே எதுவும் இயங்க தகுதியற்றதாகிவிடும்.
நான் குறுக்கிட்டேன். ” உடலின் பக்கங்களை ஒரு மனிதனால் எப்போது நினைத்தாலும் கண்டுவிட முடிகிறதே.. ஏன் செல்லின் இயக்கங்களைக்கூட அவனால் வரையறுக்க முடிகின்றதே? “
அதற்க்கு அவரின் விளக்கம் இப்படியாக இருந்தது.” எப்படி ஒரு செல்லினை வரையறுக்கவோ பார்க்கவோ ஒரு நுண்ணோக்கி தேவையோ அது போலதான், கடவுளைக்காணவோ அல்லது உணரவோ ( உணர்வதுதான் கடவுள் என்று நினைவூட்டுகிறார்)  ஆத்திகம் என்ற ஒரு இடைப்பொருள் தேவை.
மீண்டும் குறுக்கிட்டேன். ” அப்பொழுது வேத சாஷ்திரங்கள் சொல்வது போன்ற தேவ லோகம், நாக லோகம், வைகுண்டம், கைலாயம் போன்றவற்றை மறுக்கிறீர்களா?”
” லோகங்கள் என்பது புராணங்களில் தேவர்கள், முனிவர்கள் சென்று தங்கி வந்த லோகங்கள். அதில் கடவுளின் பங்கு இல்லை. வைகுண்டம் கைலாயம் போன்றவை கடவுளின் சுற்றுலாதலங்கள் போன்றவை” ( சமாளிப்பில் அவரை பார்க்க முடிந்தது. கற்பனைகளின் எல்லையை தாண்டிக்கொண்டிருந்தார். சிரிப்புடன் கொஞ்சம் கோபமும் தலைக்கேறியது  )
அவரின் பதில் இதுதான். கடவுள் என்பவர் அரூபமற்ற, அனைத்திலும் நிறைந்தவர். அவர் எங்கும் சென்றுவரவும், எந்த உலகத்தையும் படைக்கவும் அழிக்கவும் ஆற்றல் பெற்றவர்.
அடுத்து, ” நீங்கள் கூறும் கடவுள்கள் எதைஎதையெல்லாம் கொடுக்கவல்லது?”
” ஏதோ கைல நோட் வச்சு எழுதுறிங்க இல்ல? அதுல கொஞ்சம் முன்னாடி படிச்சு பாருங்க.” ( சிரித்துக் கொண்டேன்!)
அவர் முன்னே கூறியபடி, கடவுள் என்பது அனைத்தையும் அழிக்கவும், கொடுக்கவும் வல்ல ஆற்றல் படைத்தது. அதனை தேடி போகும்போது அது நமக்கு விரும்பியவற்றைகொடுக்கும். அது எதுவாக இருந்தாலும் சரி. நம்பிக்கையோடு கேட்டால் நிச்சயம் கிடைக்கும். ( வேலைக்கு போகம மாத மாத சம்பளம்?)
“உங்களின் இந்த வாழ்க்கை நிலைக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் அல்லது காரணம் உள்ளதாக நினைக்கிறீர்களா? அப்படியானால் என்ன? “
“வாழ்கை நிலை  என்பது என்னைப் போன்ற கடவுள் நம்பிக்கையாலனைப் பொறுத்தவரை, விதி தீர்மானிப்பதாகும். விதி என்பது நாம் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்து கடவுளால் தைக்கப்படுவது ஆகும்!  இதுவே கடவுளின் பங்கு.”
மேலும் அவரைப் பொறுத்தவரை, தான் நிம்மதியான ஒரு சூழ்நிலையில் இருக்க அவர் போன ஜென்மத்தில் செய்த சில நல்ல விசயங்களும், கடவுளின் அனுகூலமும்தான் காரணங்கள். மற்றபடி அவர் உழைப்பதோ, சாப்பிடுவதோ ( மக்களின் பணத்தை அல்ல) அவரின் சொந்த முயற்சி அல்லது சொந்த செயலோ அல்ல. அனைத்தும் கடவுளால் நிர்ணயிக்கப்படுவது.
” போன ஜென்மம் என்றால் என்ன? அது எப்படி சாத்தியம்?”
” இந்த கேள்விக்கும் பதில் நீங்களே சொன்னீங்களே! விஷ்ணு பகவான் ஒரு ஜென்மத்தில் இரமான் ஆகவும், மறு ஜென்மத்தில் கிருஷ்ணனாகவும்.. இது போன்று தொடர்ந்து தசாவதாரங்கள் எடுத்ததே ஜென்மங்களில்தானே. ( ஒ! இப்படி வேற ஒன்னு இருக்கா! )
அதாவது இந்த வினாவுக்கான அவர் பதில், கடவுள் மனித வாழ்கையை ஒவ்வொரு ஜென்மங்களிலும் செய்யும் தவறுகளைப் பொறுத்து அடுத்தடுத்த ஜென்மங்களில் தண்டனை கொடுக்கிறாராம். ஒரு ஆசிரியர் மாணவன் செய்யும் குறும்புகளுக்காக அவர்களை மண்டியிடச் செய்வது போல. ( நல்ல இருக்கே!)
குறுக்கிட்டேன். ” அப்பொழுது எல்லாவற்றிற்கும் முதலாக வந்த ஜென்மம் எதாக இருந்திருக்கும்?”
சிரித்துக்கொண்டே ” தேவர்கள் முனிவர்கள் அரசர்களாகவும் இருக்கலாம்.. ஆனால் அழகான வாழ்வாக இருந்திருக்கும்.” ( ஷப்பா! இப்பவே கண்ணக்கட்டுதே!!)கடமைக்காக கடைசி
கேள்வியையும் கொஞ்சம் திருத்திக் கேட்டேன்.
” நீங்கள் விரும்பும் கடவுளின் அல்லது கடவுளின் ரூபம் என்ன?
” அவர் அரூபம் ஆனவர். இருந்தாலும் அவரை அழைக்கும் ரூபத்தில் பார்க்க முடியும். நான் விரும்பும் உருவ வழிபாடு ______”
(அவரின் விருப்ப உருவ வழிபாடை பதியவில்லை!)
பின்பு ஒரு கப் காப்பியை குடித்து நன்றிகூறி வெளியேறிக் கொண்டேன்.!
வாசல் கதவுகளை தாண்டும்போது ஏதோ ஒரு கிராபிக்ஸ் படம் பார்த்தது போன்று உணர்வு.
ஒன்றுமட்டும் நன்றாகப் புரிந்தது. ஆழமான ஆத்திகவாதிகள் சுயஅறிவுக் கருத்துகளுக்கு தகுந்தாற்போல் பதில்களை தர இயல்கிறதோ இல்லையோ.. அதற்க்கு கொக்கி போடுகின்ற வகையில் நிரூபிக்க முடியாத.. நிருபிப்பது போன்ற போலித்தன்மைகொண்ட கேள்விகளை புணைவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இவரின் உள்மனதின் வார்த்தைகளைக் கொண்டு இவரால் உருவாக்கப்பட்ட கடவுளை இப்படி கண்டறியலாம். இவரின் கடவுள், பிறப்பின் ஆரம்பத்தில் பல குழப்பம் நிறைந்தவர். அவர் வந்த தடம் மறுசீரமைக்கப்பட்டு கால்த்தடம் அழிக்கப்பட்டுவிடப்பட்டது. இவர் குடும்பமும் அதீத ஆத்திக எண்ணம் கொண்டது. இவர் பகுதி 1 ன் படி குடும்ப பழக்க வழக்கங்களால் ஆன்மீகவாதியாக மாற்றப்பட்டவர். வாசலில் கரி மிளகாய் கட்டுவது போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் உள்ளவர். இவரின் அழுத்தமான வாழ்க்கை சூழ்நிலையை கடவுள் என்ற மாய பிம்பங்களைக் கொண்டு அமைதியாக்கிக்கொள்கிறார். இவர் போன்றவர்கள் அடிக்கடி கோவில் செல்வது.. மனது அமைதியாக நாம் பூங்கா செல்வது போன்ற சூழ்நிலையே. இவரைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் அமைதியையும் வேண்டும் போது பதவி பணத்தையும் கொடுப்பவர்!
—————————————————————————————————————————————-
வாழ்கையில் நடக்கத் தெரிந்தும் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறோம்!
—————————————————————————————————————————————-
இன்னும் வருவார்கள் அப்பாவிகள்…  அலசுவோம்!