கனவுகண்டேன் நான்!
இறுகி கவ்வியிருக்கும்
இரைத்தவளை பாம்பாய்,
எனை பின்னிப்பிணைந்திருந்த
கவலைகள் அனைத்தும்
இடி விழுந்ததாய் பதறியோட
ஒரு கனவுகண்டேன் நான்!
இமைகள் எனும் மயிர் நுனிகளில்
தேங்கி நின்ற கண்ணீர் துளிகள்,
இறுதியாய் என் வருத்தங்களோடு கரைந்தோட
நிரந்தரமாய் ஒரு கனவு கண்டேன்!
இதுதான் வாழ்க்கை..
இப்படித்தான் வாழ்க்கை…
எத்தனைபேர் கூற கேட்டதுண்டு.
அதை இன்று முற்றிலும் புரிந்தவனாய்,
புத்தம் புதிதாய் ஒரு கனவு கண்டேன்!
ஐம்பூதங்களும் அடங்கியதாய்,
என் திசைகளும் என்னசைவில் ஒடுங்கியதாய்,
எனக்குள் நான் இன்னுமொருமுறை புதிதாய் பிறந்ததாய்
ஒரு கனவு கண்டேன்!
நேற்று வரை,
சென்ற நிமிடம் வரை,
எனக்கே எனக்கென காத்திருந்த கட்டுபாடுகள் அனைத்தும்
மழை நீர் மணலாய் கரைதகர்த்து ஓடியதாய்
ஒரு கனவு கண்டேன்!
இனி வருத்தங்களும் கவலைகளும்,
என்னை அடையாளம் கண்டு கொள்ள போவதில்லை!
கண்ணீர்த்துளிகளும் என்னை உறவு கொண்டாட போவதில்லை!
அனைத்தும் கரைந்துவிட்ட கற்பூரமாய்
இனி காற்றோடு கரையலாம்!
அதோ,
என் பிண்டம் வைத்து எரிக்கப்படும்
அந்த விறகு கட்டைகளின் சாம்பலோடு..
காற்றோடு கள்ளமொழி பேசும் அந்த புகையோடு..!
“ஆம்! நான் கண்ட கனவு சொல்லிச் சென்றது இது தான்!
வருத்தங்கள் … மனிதனின் குருதியோடு கலந்த கருப்பு அணுக்கள்..”
—
நன்றிகளுடன்,
வி.பி.மறவன்!