கவலைகளின் மீது
கல்லெறியக் கற்றுக் கொண்டேன்.
நேற்றுவரை
என் இதயத்துக்குள் விழுந்த
இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு
சோகத்தை மட்டுமே
ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில்.
புரிந்து விட்டது…
வாழ்க்கை என்பது
கவலை ஆணிகளால் நெய்யப்படும்
சவப்பெட்டி அல்ல.
அதோ
அந்த நீள் கடலின்
சிறு துளி நான்…
இதோ
இந்த மணல் மேட்டின்
ஒரு அணு நான்…
என் கரங்களின் ரேகையைப்
பிடுங்கி விட்டு
பூமத்திய ரேகையைப்
புகுத்த முடியாது.
அழுத்தமாய் இழுத்தாலும்
அட்சக்கோடுகள்
அறுந்து விழப்போவதில்லை !!!
துருவங்களுக்குத்
திருகாணி மாட்டி
உலக உருண்டையை என்
மேஜை மீது மாட்ட முடியாது.
விரையும் வினாடிகளில்,
நடக்கும் நிமிடங்களில்,
நகரும் நாட்களில்,
நான் தேடிக்கொண்டிருப்பதாய் நினைத்து
தொலைத்தவை தான் அதிகம்
ரசிக்கக் கற்றுக் கொண்டேன்
அதிகாலையில் ஜன்னல் திறந்ததும்
முகத்தை முத்தமிடும்
அந்த பனிக்காற்று முதல்…
அந்தியில்
முச்சந்தியில்
அவிழ்க்கப்படும் அரட்டைகள் வரை…
பூ தேடி
அலைவதை நிறுத்திய பின்
புரிகிறது
நிற்குமிடமே நந்தவனத்தின்
நடுப்பாகம் என்பது.
இப்போதெல்லாம்
இரவுப் படுக்கையின் இரண்டு பக்கமும்
சந்தோஷங்கள் மட்டுமே
சேமித்து வைக்கிறேன்…
கவலைக் கற்களைக் கொண்டு
சுய கல்லறை கட்டிக் கொள்வதை
நிறுத்தியபின்
சாயம் பூசா சம்பா அரிசிபோல
சோக மூட்டைகள்
கழனிகளுக்கே திரும்பிவிடுகின்றன..
its really interesting.. really u have nice thoughts dude